ADDED : ஏப் 20, 2026 09:59 PM
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட மலையோர கிராமங்களில் தினசரி காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால், அப்பகுதியில் மாலை நேரங்களில் பிரச்சாரம் செய்வதை வேட்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பன்னீர்மடை, வீரபாண்டி, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மாலை நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் வேட்பாளர்கள் அப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' சின்னதடாகம் வட்டாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பொதுமக்களை நேரடியாக சந்திக்க முடியும். அந்த நேரத்தில் தோட்டப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால், தற்போது ஆண்டு முழுவதுமே மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால், பகல் நேரத்தில் மட்டும் வேட்பாளர்கள் முக்கிய சந்திப்புகளில் நின்று பிரச்சாரம் செய்துவிட்டு, குக் கிராமங்களுக்குள் வருவதை தவிர்த்து வருகின்றனர்.
குறிப்பாக, மாலை நேரங்களில் மலையோர கிராமங்களில் பிரச்சாரம் செய்வதை வேட்பாளர்கள் இம்முறை முழுவதுமாக தவிர்த்து விட்டனர். வேளாண் நிலங்களில், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே வேட்பாளர்கள் சுதந்திரமாக சின்னதடாகம் வட்டாரத்தில் பிரச்சாரம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது' என்றனர்.
