ADDED : செப் 28, 2026 08:22 PM
சூலூர்: சூலூர் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சூலூர் அடுத்த சிந்தாமணி புதூர் டோல்கேட் அருகே எஸ்.ஐ., யுவராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த இரு வாலிபர்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், 2 கிலோ கஞ்சா மற்றும் 1000 டேபண்டால், மாத்திரைகள், 200 நைட்ரசிபாம் தூக்க மாத்திரைகள் மற்றும் நீடில்களை, வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததும், பெங்களூரில் இருந்து வாங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கோவை, சவுரிபாளையத்தை சேர்ந்த விஷ்ணு பிரபு ,18, உடையாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்,29, என்பதும், இருவர் மீதும் பீளமேடு, சிங்காநல்லுர் ஸ்டேஷன்களில் வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
