/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்மாதிரி பூங்காவுக்கு மின் கட்டணம் செலுத்த முடியல! இரண்டாவது முறையாக பூட்டு போட்டாச்சு
/
முன்மாதிரி பூங்காவுக்கு மின் கட்டணம் செலுத்த முடியல! இரண்டாவது முறையாக பூட்டு போட்டாச்சு
முன்மாதிரி பூங்காவுக்கு மின் கட்டணம் செலுத்த முடியல! இரண்டாவது முறையாக பூட்டு போட்டாச்சு
முன்மாதிரி பூங்காவுக்கு மின் கட்டணம் செலுத்த முடியல! இரண்டாவது முறையாக பூட்டு போட்டாச்சு
ADDED : அக் 08, 2024 11:34 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி ஜோதிநகர் பூங்கா பயன்பாடின்றி பூட்டிக்கிடப்பதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி ஜோதிநகரில், 4.15 ஏக்கர் பரப்பளவில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா, நான்கு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளே மற்றும் பூங்காவுக்கு வெளியே அகலமான நடைபாதை, இரண்டு சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டது.
நறுமண தாவரங்கள், மூலிகைகள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், நிழற்கூரைகள், மின் விளக்குகள், கல்லால் அமைக்கப்படும் இருக்கைகள் அமைக்கப்பட்டன. கேன்டீன், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு கட்டப்பட்ட பூங்கா, தி.மு.க., ஆட்சியில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.அதன்பின், மின்கட்டணம் அதிகளவு உயர்ந்ததால் பூங்காவை பராமரிப்புக்கு எடுத்தவரால், பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின், நகராட்சி நிர்வாகம் வாயிலாக மின்கட்டண பாக்கியில் குறிப்பிட்ட தொகை மட்டும் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, மின் இணைப்பு கிடைத்ததால் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. செயல்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே மீண்டும் பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. மின்கட்டணம் பாக்கியுள்ளதால், ஒப்பந்தம் எடுத்தவர் செலுத்த முடியாத நிலையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீண்டும் பூங்கா பூட்டப்பட்டதால், அங்குள்ள செடிகளுக்கு போதிய நீர் கிடைக்காததால் வாடி வதங்குகின்றன.முன்மாதிரி பூங்காவை பரமாரிக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவதுடன், யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறுகிறது. பூங்கா அமைக்கும் போது பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்பு மாற்றம் செய்யாமல் உள்ளது.
இதை நிரந்த மின் இணைப்புக்கு மாற்றம் செய்தும், கட்டண பாக்கியை உடனடியாக செலுத்த ஏற்பாடுகளை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''பூங்கா ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள செடிகளை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மின்கட்டணம் செலுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும்,'' என்றார்.