/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகள் நலம் காக்கும் இருதய சிகிச்சைகள்
/
குழந்தைகள் நலம் காக்கும் இருதய சிகிச்சைகள்
ADDED : ஜூலை 03, 2025 09:29 PM
'குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய பாதிப்பை, தீவிரமற்றது, தீவிரமானது என இரு வகையாக பிரிக்கலாம். தீவிரமற்ற பாதிப்புகளில் பல நாளடைவில் தானாகவே சரியாகிவிடும்' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, குழந்தைகள் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் வினோத் துரைசாமி.
மேலும் அவர் கூறியதாவது:
சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இருதய பாதிப்பு இருக்கிறது. இருதயக்குழாய்களில் அடைப்பு, ரத்தக்குழாய் குறுகி இருப்பது, ஓட்டை, வால்வு சுருங்கியிருப்பது மற்றும் இருதயம் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்.
மேலும், ஆக்சிஜன் குறைபாட்டால் சயனோடிக் இருதய பாதிப்பும் குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. பிறவி பாதிப்பு 25 சதவீதம் தீவிர பாதிப்பாக இருக்கும்; உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சு விடுவதில் சிரமப்படுவதால், தொடர்ச்சியாக பால் குடிக்க முடியாமல் அவதிப்படுவர். இருதய துடிப்பும், மூச்சு விடுவதும் தாறுமாறாக இருக்கும்; சோர்வாக காணப்படுவர். எடை அதிகரிக்காது, தொடர்ச்சியாக இருமல், சளி, நிமோனியா காய்ச்சல் ஆகியவை ஏற்படும். ஆக்சிஜன் குறைபாடு பிரச்னையால், நாக்கு மற்றும் விரல் நகங்கள் நீல நிறத்தில் மாறும்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று, உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளிப்பது அவசியம். மார்பு எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., எக்கோகார்டியோகிராம் எடுக்கப்பட்டு, பாதிப்பு கண்டறியப்பட்டு, அதற்கேற்ப மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.
இருதயத்தில் சிறிய அளவிலான ஓட்டை இருந்தால், அது நாளடைவில் தானாகவே மறைந்துவிடும். அதுவே ரத்தக்குழாய்களில் அடைப்பு போன்ற பிரச்னை இருந்தால், கட்டாயம் அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கே.எம்.சி.எச்.,ல் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இதற்கு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.