/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயோ-காஸ் பிளான்ட்டுக்கு எதிரான வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் டிச. 9ல் விசாரணை
/
பயோ-காஸ் பிளான்ட்டுக்கு எதிரான வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் டிச. 9ல் விசாரணை
பயோ-காஸ் பிளான்ட்டுக்கு எதிரான வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் டிச. 9ல் விசாரணை
பயோ-காஸ் பிளான்ட்டுக்கு எதிரான வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் டிச. 9ல் விசாரணை
ADDED : நவ 14, 2025 10:13 PM

கோவை: கோவை நகர்ப்பகுதியில் சேகரமாகும் குப்பை வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. தரம் பிரித்து சேகரித்தாலும், 110 டன் குப்பை அங்கு திறந்தவெளியில் மாநகராட்சி கொட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
அதனால், தனியார் பங்களிப்புடன் நாளொன்றுக்கு 250 டன் மக்கும் குப்பையில் 'பயோ காஸ்' தயாரிக்கும் திட்டத்தை, மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. ரூ.69.20 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்தும் மையம் வெள்ளலுார் கிடங்கு வளாகத்தில் அமைகிறது. தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, ஆக. 24ல் இப்பணியை துவக்கி வைத்தார்.
ஏற்கனவே குவித்து வைத்திருக்கும் குப்பையால், வெள்ளலுார் பகுதி மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இச்சூழலில், மக்கும் குப்பையில் காஸ் தயாரிக்கும் மையம் அமைந்தால் சுகாதார பிரச்னை மேலும் அதிகரிக்கும் என அச்சப்படுகின்றனர்.
அதனால், ஆட்சேபனை தெரிவித்து குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர், அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். கோரிக்கை, மாநகராட்சியால் பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கூட்டுக்குழு செயலாளர் மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், 'வெள்ளலுார் கிடங்கில் 300 ஏக்கர் பரப்புக்கு குப்பை பரவிக் கிடக்கிறது. மாநகராட்சி தரப்பில் தினமும் 1,000 முதல், 1,100 டன் வரை கொட்டப்படுகிறது. பழைய குப்பையை மாநகராட்சி இன்னும் அகற்றாமல் இருக்கிறது. புதிய குப்பையை, மீண்டும் கொட்டி வருகிறது. 'பயோ காஸ் பிளான்ட்' அமைக்க ஆக., மாதம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் அவகாசம் கோரியதால், டிச. 9க்கு ஒத்திவைக்கப்பட்டது.

