/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
/
தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ADDED : மே 14, 2025 11:57 PM
கோவை, ; கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை,இதுவரை தொடங்கப்படாததை எதிர்த்து, தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய, ஆர்.டி.இ., சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை, இதுவரை தொடங்கப்படாததால், பெற்றோர் மத்தியில் இத்திட்டம் செயல்படுமா என, கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, மே 20ம் தேதிக்குள் ஆர்.டி.இ.,மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைவது வழக்கம். தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளும், ஜூன் 2ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்சுவரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு, சட்டப்படி கிடைக்கின்ற கல்வி வாய்ப்பை, முற்றிலுமாக தமிழக அரசு கைவிட்டு விட்டது; சேர்க்கை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அதனால், உடனடியாக ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கை துவங்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.