ரோட்டில் சுற்றும் கால்நடைகள் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
ரோட்டில் சுற்றும் கால்நடைகள் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
ADDED : அக் 25, 2026 08:15 PM

வால்பாறை: வால்பாறை நகரில் நடமாடும் கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
வால்பாறையில், இடநெருக்கடியால் மக்கள் நாள் தோறும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், வால்பாறை நகரில் சமீப காலமாக கால்நடைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆடு, மாடு, தெருநாய்கள் ரோட்டில் சுற்றுவதால், வாகனங்கள் செல்ல முடியாமலும், ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வானங்களில் செல்பவர்கள் கால்நடைகளின் நடமாட்டத்தால், விபத்துக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பொதுமக்கள் கூறுகையில், ‘சமீப காலமாக கால்நடைகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளதால், ரோட்டில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ரோட்டில் சுற்றும் கால்நடைகளை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். கால்நடைகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,’ என்றனர்.
நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘கால்நடைகளை ரோட்டில் நடமாட விடக்கூடாது என உரிமையாளர்களுக்கு ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், 10 கால்நடைகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் கால்நடைகள் நடமாடினால் அதிகபட்சமாக, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, கால்நடைகள் காப்பகத்துக்கு அனுப்பப்படும்,’’ என்றார்.
