/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாடுகள் வரத்து சரிவு; விற்பனையும் மந்தம்
/
மாடுகள் வரத்து சரிவு; விற்பனையும் மந்தம்
ADDED : ஜூலை 01, 2025 10:03 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாட்டு சந்தையில், நேற்று, ஒரு கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. இதற்காக, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
சந்தைக்கு வரும் பெரும்பாலான மாடுகள், கேரள மாநில வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்படுகிறது. கடந்த மாதம் துவக்கத்தில் மாடுகள் வரத்து அதிகரித்து, கூடுதல் விலைக்கும் விற்பனையானது.
ஆனால், கடந்த வாரத்தில் இருந்து, மாடுகள் வரத்து குறைந்தது. நேற்றும் போதிய எண்ணிக்கையில் மாடுகள் இல்லாதால், கேரள வியாபாரிகள் வருகையும் குறைந்தே காணப்பட்டது. மாடு விற்பனையும் மந்தமாக இருந்தது.
வியாபாரிகள் கூறுகையில், 'கேரள வியாபாரிகள் வருகை குறைவால் மாடு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. காளை - 55 ஆயிரம், எருமை - 50 ஆயிரம், பசு மாடு - 38 ஆயிரம், கன்று குட்டிகள் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், 5 முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்து, விற்பனையானது. சராசரியாக வாரத்தில், குறைந்தபட்சம், 1.60 கோடி முதல் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் இருக்கும். ஆனால் நேற்று, ஒரு கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது.
இவ்வாறு, கூறினர்.