/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழுத்தம் தாங்காமல் உடைந்தது சிமென்ட் குழாய்
/
அழுத்தம் தாங்காமல் உடைந்தது சிமென்ட் குழாய்
ADDED : டிச 13, 2025 06:39 AM

காந்திபுரம்: காந்திபுரம் அருகே நஞ்சப்பா ரோட்டில் குழாய் உடைந்ததால், ரோட்டில் ஆறு போல் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாநகராட்சியில் 60வது வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிப்பதற்கான பணிகளில் 'சூயஸ்' நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. குழாய் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. வ.உ.சி. பூங்கா அருகே, மேல்நிலைத்தொட்டி கட்டப்படுகிறது. சமீபத்தில் வ.உ.சி., பூங்கா சந்திப்பு மற்றும் செம்மொழி பூங்கா எதிரே, பழைய சிமென்ட் குழாய்களை அகற்றி விட்டு, இரும்பு குழாய் பொருத்தப்பட்டது.
இச்சூழலில், சரவணம்பட்டி தொட்டியில் இருந்து வரும் 700 எம்.எம். விட்டமுள்ள சிமென்ட் குழாய், நஞ்சப்பா ரோடு பார்க் கேட் அருகே அழுத்தம் தாங்காமல், நேற்று காலை உடைந்தது.
டவுன்ஹால் மற்றும் புலியகுளம் தொட்டிகளுக்கு, குடிநீர் கொண்டு செல்லும் முக்கியமான குழாய் இது. உடைப்பு ஏற்பட்டதும், ரோட்டில் ஆறு போல் தண்ணீர் ஓடியது.
நஞ்சப்பா ரோட்டில் வழிந்தோடி, அவிநாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோயில் முன், குளம் போல் தேங்கியது.
மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததும் வால்வு அடைக்கப்பட்டு, உடைப்பு சரி செய்யும் பணி துவக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அழுத்தம் தாங்காமல் குழாய் உடைந்தது. உடனடியாக சீரமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் விரைந்து துவக்கப்படும்' என்றனர்.

