/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணியூரில் மத்திய அரசு அதிகாரி ஆய்வு
/
கணியூரில் மத்திய அரசு அதிகாரி ஆய்வு
ADDED : ஜன 22, 2025 11:23 PM

கருமத்தம்பட்டி; கணியூர் ஊராட்சியில் நடக்கும் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில், செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்து, மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத்தின் இயக்குனர் கரண்சித் சிங், ஸ்ரீதர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை, ஆண்கள் மற்றும் மகளிர் கழிப்பிடங்கள், சேடர்பாளையம் தனி நபர் கழிப்பிடங்களை ஆய்வு செய்தார். செல்லப்பம்பாளையம் அங்கன்வாடி மையம் மற்றும் அங்கு நிறுவப்பட்டுள்ள கோபர்தன் காஸ் கட்டமைப்பின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.
பொன்னாண்டாம்பாளையத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, மறுசுழற்சி மூலம் நன்னீராக்கப்பட்டு, மரக்கன்றுகள் வளர்ப்புக்கு பயன்படுத்தி வருவதை அவர் பாராட்டினார். மேலும், உணவு மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு, இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து, அதன் மூலம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு சமைப்பதை பாராட்டிய அவர், அதை மேலும் விரிவுபடுத்த ஆலோசனைகள் வழங்கினார்.
நெகிழி கழிவுகளால் தயாரிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் மற்றும் ஷீட்டுகளை கொண்டு கட்டப்பட்ட அறையை பார்வையிட்டு பாராட்டினார்.
கோவை மாவட்ட திட்ட இயக்குனர் மதுரா, உதவி திட்ட அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சூலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முத்துராஜூ, ஒன்றிய பொறியாளர் அருண், ஊராட்சி செயலர் ஜெகதீசன், முன்னாள் தலைவர் வேலுசாமி, வார்டு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

