/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' உறுதி மாணவ, மாணவியர் உற்சாகம்
/
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' உறுதி மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' உறுதி மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' உறுதி மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : மார் 20, 2024 12:25 AM

- நிருபர் குழு -
கணிதம், வணிகவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததால், நுாறு சதவீத மதிப்பெண்கள் கிடைக்கும் என, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 37 மையங்களில் நேற்று நடந்தது. மாணவர்கள், கணிதம், விலங்கியல், வணிகவியல் மற்றும் வேளாண் அறிவியல் தேர்வுகளை எதிர்கொண்டனர்.
கணிதம் தேர்வை, 1,722 மாணவர்கள், 2,091 மாணவியர் என, 3,813 பேர் எழுதினர். 18 மாணவர்கள், 18 மாணவியர் என, 36 பேர் எழுதவில்லை.
விலங்கியல் தேர்வை, 69 மாணவர்கள், 121 மாணவியர் என, 190 பேர் எழுதினர். அதேநேரம், 10 மாணவர்கள், 6 மாணவியர் என, 16 பேர் தேர்வு எழுதவில்லை.
வணிகவியல் தேர்வை, 1,472 மாணவர்கள், 1,755 மாணவியர் என, மொத்தம் 3,227 பேர் எழுதினர். 26 மாணவர்கள், 16 மாணவியர் என, 42 பேர் தேர்வு எழுதவில்லை.
வரலாறு தேர்வை, 179 மாணவர்கள், 210 மாணவியர் என, 389 பேர் எழுதினர். அதேநேரம், 13 மாணவர்கள், 4 மாணவியர் என, 17 பேர் தேர்வு எழுதவில்லை. தாவரவியல் தேர்வை, 72 மாணவர்கள், 116 மாணவியர் என, 188 பேர் எழுதினர். ஒரு மாணவர், 10 மாணவியர் என, 11 பேர் எழுதவில்லை. வேளாண் அறிவியல் தேர்வை, 56 மாணவர்கள், 10 மாணவியர் என, 66 பேர் எழுதினர். இரண்டு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:
நாச்சியார் மெட்ரிக் மாணவி கீர்த்தனா: வணிகவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக இருந்ததால் விரைந்து தேர்வை எழுதி முடித்தேன். குறிப்பாக, கட்டாய மதிப்பெண், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எல்லாம் ரொம்ப ஈசியாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தில் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது.
விஷ்ணு: வணிகவியல் தேர்வில் அனைத்து வினாக்களும் மிகவும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தீவிர பயிற்சி எடுத்திருந்ததால் விரைந்து பதில் எழுதினேன். ஐந்து மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தின் பின்னால் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளதால் முழு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
ஸ்ரீநிதின்: கணக்கு தேர்வு நினைத்ததை விட மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு மட்டும் புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்ததால், அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
சாந்தி பள்ளி மாணவி கல்பிதாஸ்ரீ: கணிதம் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமின்றி அனைத்து வினாக்களும் மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்ட ஒரு வினா இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
அஸ்வின்: திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும், கணிதம் தேர்வில் இடம்பெற்றிருந்ததால், மிகவும் எளிதாக பதிலை எழுதினேன். கட்டாய வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தது. கண்டிப்பாக, நுாறு மதிப்பெண்கள் கிடைக்கும் என, நம்புகிறேன்.
ஸ்ரீநிதி: வணிகவியல் தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் விரைந்து பதில் எழுதினேன். ஆசிரியர்கள் வாயிலாக தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.
அக் ஷயா: வணிகவியல் தேர்வில், ஐந்து மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே, நல்ல முறையில் படித்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதினேன். மொத்தத்தில் இந்த தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது.
உடுமலை
பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான முக்கியமான கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வுகள் நடந்தது. இரண்டு தேர்விலும் சதம் எடுப்பது சுலபம் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
அபிேஷக்: இயற்பியல், வேதியியல் தேர்வுகள் கடினமாக இருந்ததால், கணிதத்தேர்வு எளிமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தோம். அதேபோல், மிகவும் எளிமையாக வினாத்தாள் இருந்தது. பலமுறை பயிற்சி செய்த கணக்குகள் அதிகம் கேட்கப்பட்டிருந்ததால், மிக விரைவில் விடைகளை போட முடிந்தது. சதம் எடுப்பதும் ஈஸிதான்.
நவீன்ஹரிபிரசாத்: கணிதத்தில் அதற்கு முந்தைய தேர்வுகள், பள்ளியில் வைக்கப்பட்ட பயிற்சி தேர்வுகளில் வந்த வினாக்களாக இருந்ததால் தேர்வு எளிமையாக இருந்தது. கணக்குகள் எளிமையாக இருந்ததால் குஷியாக தேர்வு எழுதிவிட்டோம். அதிக மாணவர்கள் சதம் எடுப்பதற்கான வாய்ப்புள்ளது.
அகல்யா: கணிதம் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் மற்றும் நெடுவினாக்கள் என அனைத்து பகுதிகளிலும் வினாக்கள் சுலபமாக எழுதும் வகையில்தான் இருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதற்கான வினாத்தாளாக இருந்தது.
ஹரிதா: கணிதத்தேர்வில் காலாண்டு, அரையாண்டு, முந்தைய பொதுத்தேர்வு வினாக்கள் பலவும் பொதுத்தேர்வில் இடம் பெற்றுள்ளன. இதனால் பதட்டமில்லாமல் தெளிவாகவும், விரைவாகவும் விடைகளை போட முடிந்தது. கணக்குகளை போட்ட பின்னர், சரிபார்ப்பதற்கும் நேரம் இருந்தது. கணிதத்தேர்வு மிகவும் ஈஸியாக இருந்தது.
அனுஸ்ரீசண்முகப்ரியா: பொருளியல் தேர்வு எளிமையாக இருந்ததால், வணிகவியல் கடினமாக இருக்கும் என பயந்து கொண்டிருந்தோம். ஆனால் தேர்வு சுலபமாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாப்பகுதியில் மட்டும் குறிப்பிட்ட வினாக்கள் பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டன. ஆனாலும் அவையும் விடை எழுதும் வகையில்தான் இருந்தன.
ரேணுகாதேவி: வணிகவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில், இரண்டு மூன்று வினாக்கள் மட்டும் சிறிது குழப்பும் வகையில் இருந்தது. மற்ற பகுதிகள் அனைத்துமே பயிற்சி பெற்ற வினாக்களாகவும், அடிக்கடி தேர்வு எழுதியவையாகவும் இருந்ததால் விடை எழுத சுலபமாக இருந்தது.
பிரஹர்சிதா: வணிகவியல் தேர்வில் வினாக்கள் எளிமையாக வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிக வினாக்கள் பள்ளியில் அளித்த பயிற்சி தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டதாக இருந்ததால், விடை எழுதுவதிலும் ஆர்வமாக இருந்தது. தேர்வு மிகவும் எளிமைதான். அதிக மாணவர்கள் சென்டம் எடுக்கலாம்.

