ADDED : அக் 21, 2024 11:40 PM

மேட்டுப்பாளையம் : நகராட்சி தலைவர் வார்டில் குறிப்பிடும் வகையில், பணிகள் ஏதும் நடைபெறவில்லை. பொது மக்கள் பிரச்னைகள் அதிகளவில் உள்ளன.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் நான்காவது வார்டு, நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் வார்டாகும். இவர் தி.மு.க., வைச் சேர்ந்தவர். இந்த வார்டில் மழை நீர் வடிகால்கள் இடிந்து கிடப்பதால், அதை சரியாக சுத்தம் செய்வதில்லை என்ற, புகார் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இது குறித்து வார்டு மக்கள் கூறியதாவது:
மதினா நகரில் நேருஜி நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வடக்கு பகுதியில் பவானி ஆறு ஓடுகிறது.
பள்ளியின் கரைப்பகுதியில் காம்பவுண்ட் சுவர் அருகே, மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதன் வழியாக பாம்புகள் பள்ளியின் உள்ளேயும், குடியிருப்பு பகுதிகளின் உள்ளேயும் வருகின்றன. மேலும் ஆற்றின் கரையோரம், பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே பவானி ஆற்றின் கரையோரம், பள்ளிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
இந்த வார்டில் உள்ள மழை நீர் வடிகால்கள் கட்டி, பல ஆண்டுகள் ஆனதால், அனைத்த வடிகால்களும் இடிந்துள்ளன. இடிந்துள்ள மழை நீர் வடிகால்களை புதிதாக கட்ட வேண்டும். பழைய போலீஸ் ஸ்டேஷன் முன்பு, சிறுமுகை சாலையின் இரு பக்கம், சாக்கடை கட்ட வேண்டும். சிறுமுகை சாலையில் பெரிய பள்ளிவாசல் அருகே போலீசார் நியமித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் கூறியதாவது: நேருஜி பள்ளியை சுற்றி பவானி ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் கட்ட, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சிறுமுகை சாலையில் இரு பக்கம் புதிதாக மழை நீர் வடிகால் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யும்படி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
நிதி கிடைத்தவுடன், மழை நீர் வடிகால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நகராட்சி தலைவர் கூறினார்.
