/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் பணிமாறுதல் நடைமுறையில் மாற்றம்
/
ஆசிரியர் பணிமாறுதல் நடைமுறையில் மாற்றம்
ADDED : ஆக 10, 2025 10:58 PM
கோவை, ; அரசு பள்ளிகளில், தாவரவியல், விலங்கியல் முதுநிலை ஆசிரியர்கள் உயிரியல் பணியிடத்திற்கு பணிமாறுதல் பெறுவதற்கான நடைமுறையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 ஆசிரியர்களுக்கான, 2025-26 கல்வியாண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது.
இதில், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவு முதுநிலை ஆசிரியர்கள், உயிரியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் பெற்று பணிபுரிய அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறு மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பணியிடம் காலியானால், அந்த பணியிடம் உயிரியல் பணியிடமாக கருதப்படாமல், மீண்டும் தாவரவியல் அல்லது விலங்கியல் பணியிடமாகவே கருதப்பட்டு, பொதுமாறுதல் கலந்தாய்வில் காலியிடமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இதனால், உரிய பணியிடங்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவியது.
இந்த நடைமுறையை மாற்றியமைக்கும் வகையில், இனி வரும் பொதுமாறுதல் கலந்தாய்வுகளில், பணி ஓய்வு, மாறுதல் அல்லது பிற காரணங்களால் காலியாகும் உயிரியல் ஆசிரியர் பணியிடங்கள், உயிரியல் பணியிடங்களாகவே கருதப்பட்டு, காலியிடப் பட்டியலில் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.