/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் நிலையங்களில் ஜூலை முதல் மாற்றங்கள்
/
தபால் நிலையங்களில் ஜூலை முதல் மாற்றங்கள்
ADDED : ஜூன் 25, 2025 11:05 PM
கோவை; கோவையில், மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவையை, ஜூலை முதல் வாரம் துவங்க, தபால் துறை முடிவு செய்துள்ளது.
தபால் வினியோகப் பணிகளை மேற்பார்வையிட, போதிய கண்காணிப்பு அமைப்பு இல்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி, பல தபால் நிலையங்களில் உள்ள பீட்களை, ஆங்காங்கே ஒரே அலுவலகத்தில் இணைத்து, 'மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை (indepedent delivery center- IDC) உருவாக்க தபால் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, 80 முதல் 100 (டெலிவரி பீட்) வரை எண்ணிக்கை கொண்ட தபால்காரர்களுக்கு, ஒரு ஐ.டி.சி., ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டுவாடா தபால் நிலையங்களுக்கு வரும் கடிதங்கள், இந்த மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவைக்கு வரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
என்ன மாற்றம் வரும்
கோவை டாடாபாத், சித்தாபுதுாரில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து, கடித வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இனி, ராம்நகரில் உள்ள தபால் நிலையத்தில், ஐ.டி.சி., மையம் ஏற்படுத்தப்பட்டு, இந்த மையத்துக்கு கடிதங்கள் வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இங்கிருந்து வினியோகிக்கப்பட உள்ளன.
இதேபோல, பாப்பநாயக்கன்பாளையம் தபால் நிலையத்தில் இருந்த கடித வினியோகம், இனி, ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள மத்திய தபால் நிலையத்தில் இருந்து வினியோகிக்கும் வகையில், இங்கு ஐ.டி.சி., மையம் அமைக்கப்பட உள்ளது.
டாடாபாத், சித்தாபுதுார் தபால் அலுவலகத்தில் இருந்து கடிதங்களை பட்டுவாடா செய்து வந்த தபால்காரர்கள் இனி, ராம்நகர் ஐ.டி.சி., மையத்துக்கும், பாப்பநாயக்கன்பாளையம் தபால் நிலையத்தில் இருந்து கடிதங்கள் பட்டுவாடா செய்து வந்த தபால்காரர்கள் இனி, மத்திய தபால் நிலையத்துக்கு வந்து கடிதங்கள் பெற்று, குறிப்பிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நடைமுறை, வரும் ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.