/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரோகரா' கோஷம் முழங்க சூரசம்ஹாரம் கோலாகலம்!
/
'அரோகரா' கோஷம் முழங்க சூரசம்ஹாரம் கோலாகலம்!
ADDED : அக் 27, 2025 11:00 PM

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே குருந்தமலையில் உள்ள அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் ஒரு பகுதியாக இன்று காலையில் வள்ளி தெய்வானை சமேத வேலாயுத சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருவீதி உலா, அலங்கார பூஜை, மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா பூர்த்தி அடைகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டினை அறங்காவலர்கள் குழு தலைவர் மோகனப்பிரியா, திருக்கோவில் செயல் அலுவலர் வனிதா, அர்ச்சகர் விவேக் அறங்காவலர் உறுப்பினர்கல் ஆகியோர் செய்திருந்தனர்.
-------சூலூர் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா கடந்த ஆறு நாட்களாக, விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், குமரன் கோட்டம், காடாம்பாடி, காங்கயம் பாளையம், சூலூர் கிட்டாம் பாளையம் கண்ணம்பாளையம், பொனன்னாண்டாம் பாளையம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் நடந்தது.
கரீமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் நேற்று மாலை நடந்த சூரசம்ஹார விழாவில், கந்தா, கடம்பா, கதிர்வேலா, முருகனுக்கு அரோஹரா என்பன உள்ளிட்ட கோஷங்களுடன் முருகப்பெருமானை வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
கோவில்பாளையம் கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும் கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமான் சன்னதியில், கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கொடியேற்றம் நடந்தது.
நேற்று மாலை 5:00 மணிக்கு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
அறங்காவலர் குழு தலைவர் நாகராஜ் செயல் அலுவலர் ராமஜோதி, அறங்காவலர்கள் உட்பட பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
அன்னூர் குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 64 வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று காலை 9:30 மணிக்கு கலச பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. மாலை 5:30 மணிக்கு கல்யாண சுப்ரமணியசாமி கிரிவலம் வந்து, சூரபத்மனை வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர்கள் உள்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று காலை 7:00 மணி முதல் 8:45 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

