/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணைவேந்தர் இல்லாமல் குழப்பம்; பாரதியார் பல்கலையில் போராட்டம்
/
துணைவேந்தர் இல்லாமல் குழப்பம்; பாரதியார் பல்கலையில் போராட்டம்
துணைவேந்தர் இல்லாமல் குழப்பம்; பாரதியார் பல்கலையில் போராட்டம்
துணைவேந்தர் இல்லாமல் குழப்பம்; பாரதியார் பல்கலையில் போராட்டம்
ADDED : ஏப் 02, 2025 08:51 AM

கோவை; பாரதியார் பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்க வலியுறுத்தி, அப்பல்கலை ஆராய்ச்சி மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை பாரதியார் பல்கலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், பல்கலையில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன.
ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. துணைவேந்தர் இல்லாததே இதற்கு காரணம் என்றும், உடனே துணைவேந்தரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் கூறியதாவது: எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. ஆனால், ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கருவிகளுக்கான ஆண்டு பராமரிப்பு தொகையை பல்கலை தரவில்லை. அவை பழுதடைந்து ஆராய்ச்சிக்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகையும் கிடைப்பதில்லை. ஓரிரு மாணவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. அதை பெற்றுத்தர பல்கலையும் நடவடிக்கை எடுப்பதில்லை.
முறையாக நுழைவுத் தேர்வு எழுதி, அனைத்து தகுதிகளுடன் வரும் எங்களுக்கு உதவித்தொகை கிடைப்பதில்லை. இதனால், ஆராய்ச்சிக்கு அதிக நிதி செலவாகிறது. இதுகுறித்து பலமுறை பல்கலை நிர்வாகத்துக்கு கடிதம் கொடுத்தும்பதில் இல்லை. பட்ஜெட்டில், மாநில கல்லுாரிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அறிவிப்பு இல்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமாகும். எல்லாவற்றுக்கும் துணைவேந்தர் நியமிக்கப்படாததே காரணம் என்பதால், உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

