/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜன 19, 2024 11:17 PM

மேட்டுப்பாளையம்:கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் காரமடை அடுத்துள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோவிலும் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தேர் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன் படி நேற்று தேர் திருவிழாவின் துவக்க நிகழ்வான கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சேவற்கொடிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து, பின் கொடிமரம் கொண்டுவரப்பட்டது.
பின், அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷமிட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 23ம்தேதி வள்ளி மலையில் அம்மன் அழைப்பு பூஜை, 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம், யானை வாகன உற்சவம் உள்ளிட்டவைகள் நடக்க உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் 25ம் தேதி நடக்க உள்ளது. கொடியேற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா செய்திருந்தார்.
விழாவில் கோவில் மிராசுதாரர்கள், ஊர் பிரமுகர்கள், உபயதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.