/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறநிலைய, வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய ஆயத்தம்! கோவில் சொத்தை கண்டறிய நடவடிக்கை
/
அறநிலைய, வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய ஆயத்தம்! கோவில் சொத்தை கண்டறிய நடவடிக்கை
அறநிலைய, வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய ஆயத்தம்! கோவில் சொத்தை கண்டறிய நடவடிக்கை
அறநிலைய, வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய ஆயத்தம்! கோவில் சொத்தை கண்டறிய நடவடிக்கை
ADDED : ஜூலை 16, 2025 09:39 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி அருகே, கோவில்களுக்கு சொந்தமான, 98.99 ஏக்கர் நிலங்களை கண்டறிய வருவாய்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து அளவீடு மேற்கொள்ள ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே சின்ன நெகமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்றாயப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், சின்ன நெகமத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளன.
மொத்தம், 73.73 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளன. இந்த நிலத்தை, 26 பேர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மீட்டெடுக்கும் வகையில், நில அளவீடு செய்ய ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு ஹிந்து அமைப்புகள், ஆன்மிக பெரியோர் வலியுறுத்தி வந்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலங்களை அளவீடு செய்ய திட்டமிட்ட போது, மூன்று முறை போலீஸ் அனுமதி கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக, போலீஸ் அனுமதி கிடைத்ததால் இடத்தை அளவீடு செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
திடீரென ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில், சர்வேயர் போதுமான அளவு இல்லை எனக்காரணம் கூறி ஒத்திவைத்தனர்.
இதுபோன்று, நெகமம் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, ஏழு ஏக்கர் நிலம், நெகமம் கருடராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 18.26 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில், நெகமம் வரதராஜப்பெருமாள் கோவிலே இல்லாமல், அங்கு புதர்கள் மட்டுமே காணப்படுகிறது.அரசியல் கட்சியினர் பலம் இருப்பதால், அரசுத்துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது வேடிக்கையாகியுள்ளது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. ஹிந்து அமைப்பினர், ஆன்மிக பெரியோர், கோவை மாவட்ட கலெக்டரிடம், நிலத்தை அளவீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், 'நிலத்தை உரிய பாதுகாப்புடன் அளவீடு செய்ய வேண்டும், வருவாய்துறை, போலீசார் உரிய நாளை தேர்வு செய்து, நில அளவை பணிகளை முடிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நிலங்களை கண்டறிந்து அளவீடு செய்ய ஹிந்துசமய அறநிலையத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்களில் உள்ள, கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து அளவீடு செய்யப்பட உள்ளது. கோவில் நிலத்தின் எல்லைகளை கண்டறிந்து அங்கு அளவீடு செய்யப்படும். வருவாய்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை இரண்டும் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ளப்படும். போலீசார் பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளனர்.
இரு துறை சர்வேயர்களை கொண்டு அளவீடு செய்து எல்லைகளை வரையறுத்து வழங்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.