ADDED : மார் 18, 2026 08:50 PM
பெ.நா.பாளையம்: தமிழக சட்டசபை தேர்தலுக்கான உறுதிப்படுத்தப்படாத செய்திகள், போலி கருத்து கணிப்புகள், எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் சாதி, மத, ரீதியான மோதல்களை தூண்டும் விதமாகவோ அல்லது தனி நபர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ பதிவிடக் கூடாது. டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் குரல் பதிவுகளை பகிர்வது கடுமையான குற்றமாகும்.
அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் முற்றிலும் நடுநிலை வகிக்க வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யவோ, சின்னங்களை பயன்படுத்தவோ கூடாது. அரசியல் பதிவுகளை லைக், சேர் அல்லது பார்வேர்ட் செய்வது கூட விதி மீறலாக கருதப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
தேர்தல் பணியில் ஈடுபடும் போது எவ்வித பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டும். வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்படும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளுக்கு நிர்வாகிகளே பொறுப்பாவார்கள்.
தேவையற்ற விவாதங்களை தவிர்க்க குழுவின் அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம். விதிமீறல் பதிவுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். தேர்தல் விதி மீறல்கள் குறித்து, பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் 'சி விஜில்' செயலி அல்லது தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
