/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீமை கருவேல மரங்களுக்கு 'செக்'; வனத்துறை அதிரடி! சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை
/
சீமை கருவேல மரங்களுக்கு 'செக்'; வனத்துறை அதிரடி! சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை
சீமை கருவேல மரங்களுக்கு 'செக்'; வனத்துறை அதிரடி! சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை
சீமை கருவேல மரங்களுக்கு 'செக்'; வனத்துறை அதிரடி! சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை
ADDED : மார் 31, 2025 10:18 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர், வனத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அந்நிய தாவரமான சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சீமை கருவேல மரங்கள், பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில் கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து விதையாக கொண்டு வரப்பட்டது. இவை இன்று தமிழகம் முழுவதும் பல்கி பெருகி ஆக்கிரமித்து விட்டது.
அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இவற்றை ஒழிக்க சீமை கருவேல மரம் ஒழிப்பு இயக்கம் நடத்தி வருகின்றன.
வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள் வளர்வதை தடுக்கிறது.
விவசாய நிலத்திலும், ஏனைய செடிகள் வளர்வதை தடுக்கிறது. இவற்றின் நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. புற்களை அடியோடு வளர விடாமல், கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல்வேறு தீமைகள், சீமை கருவேல மரங்களால் ஏற்படுகிறது. இவற்றை வனப்பகுதிகளில் அழிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் சீமை கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் கூறுகையில், 'டி.பி.ஜி.பி.சி.சி.ஆர்' என்ற பசுமை வள பாதுகாப்பு திட்டத்தில் வனப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதியில் நாயக்கன்பாளையம் தெற்கு காவல் வனப்பகுதியில், 18 எக்டேர் பரப்பில் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அந்நிய தாவரமான சீமை கருவேல மரங்கள் வனப்பகுதியில் வளர்வதால், அந்த வனப் பகுதிக்கு உரிய இயற்கையான அரிய வகை மரங்கள் வளர்வது தடுக்கப்படுகிறது.
புங்கன், வாகை உள்ளிட்ட அந்தந்த வனப்பகுதிகளுக்கு உரிய மரங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் இயற்கையான சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். அப்பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளரவிட்டால், அவை இயற்கையாக விளையும் பல மரங்களை அழித்துவிடும்.
சீமை கருவேல மரங்களை அழித்த பின்பு, அதே பகுதியில், அந்த வனப்பகுதிக்கு உரிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.