பொட்டல உணவு வாங்கும் முன் இதை 'செக்' பண்ணி பாருங்க
பொட்டல உணவு வாங்கும் முன் இதை 'செக்' பண்ணி பாருங்க
ADDED : ஏப் 05, 2026 10:59 PM
கோவை: பொட்டல உணவில் தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளிட்ட 11 விஷயங்கள் முறையாக இல்லாத பட்சத்தில் புகார் அளிக்கலாம் என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) விதிமுறைப்படி, பொட்டலமிட்டப்பட்ட உணவுகளில், உணவு பொருள் பெயர், தயாரிப்பு, காலாவதி தேதி, மொத்த அளவு, ஊட்டச்சத்து விபரம் உள்ளிட்ட, 11 தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தயாரிப்பு நிறுவனத்தின் தொடர்பு எண் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் உணவுப்பொருள் குறித்து முழுமையாக அறிய முடியும்.
ஆனால், ஒரு சில மளிகை, பெட்டிக்கடைகளில் விற்கப்படும் சில தின்பண்டங்களில், எந்த தகவலும் இருப்பதில்லை. கேட்டால், 'இன்னிக்கு வந்ததுதான்' என்கின்றனர் கடைக்காரர்கள்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்த உணவாக இருந்தாலும், அதுகுறித்த விபரங்கள் இன்றி விற்க கூடாது. தயாரிப்பு, காலாவதி தேதி இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம். உணவு பொருளின் தரம், கலப்படம், தகவல் இல்லாமை ஆகிய புகார்கள் இருப்பின், கடை விவரத்துடன் 94440 42322 என்ற எண்ணில் அல்லது unavupukar@gmail.com என்ற இ-மெயில் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
