/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அமைக்கணும்
/
மாநில நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அமைக்கணும்
ADDED : ஜன 01, 2026 05:38 AM
குடிமங்கலம்: மாநில நெடுஞ் சாலையில், சட்டவிரோத செயல்களை தடுக்க, போலீஸ் செக்போஸ்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில், 23 ஊராட்சிகளுக்குட்பட்ட, 96 கிராமங்கள் உள்ளன. அதிக கிராமங்கள் உள்ளதால், குற்றத்தடுப்பு பணிகளில் ஏற்படும் தொய்வை தடுக்க, பெதப்பம்பட்டியில், புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை விடப்பட்டது.
தற்காலிக தீர்வாக, சில ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சி - தாரா புரம் மாநில நெடுஞ்சாலையில், பெதப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன், போலீஸ் செக்போஸ்ட் துவங்கப்பட்டது.
'நாள் முழுவதும், மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யவும், குற்றத்தடுப்பு பணிகளில் ஈடுபடவும், சுழற்சி ஒரு முறையில், ஒரு எஸ்.ஐ., மற்றும் போலீசார், செக்போஸ்ட்டில் நியமிக்கப்படுவார்கள். இந்த செக்போஸ்ட் நிரந்தரமாக செயல்படும்,' என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஒரு மாதத்துக்கும் குறைவாகவே, போலீசார் செக்போஸ்ட் பணிக்கு நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிழற்கூரையும் அகற்றப்பட்டது.
தற்போது, கரூர், தாராபுரம் உட்பட பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி, மணல் உட்பட கனிமவளங்கள், கேரளாவுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், செக்போஸ்ட் இல்லாததால், கடத்தல் வாகனங்கள் சுதந்திரமாக செல்கின்றன.
எனவே, பெதப்பம்பட்டி அல்லது மாநில நெடுஞ்சாலையின் ஏதாவது பகுதியில்போலீஸ் செக்போஸ்ட் அமைக்க வேண்டும். அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சார்பில், திருப்பூர் எஸ்.பி.,க்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

