/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலைக்கு கவாத்து வெட்டும் பணி தீவிரம்
/
தேயிலைக்கு கவாத்து வெட்டும் பணி தீவிரம்
ADDED : ஜன 01, 2026 05:38 AM

வால்பாறை: மழைப்பொழிவு குறைந்த நிலையில், தேயிலைச்செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளதால், கவாத்து வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில், மொத்தம், 32 ஆயிரத்து 825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் தேயிலை மட்டும், 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் தேயிலைத்துாள், கோவை, குன்னுார்,கொச்சி போன்ற ஏலமையத்திற்கும், வெளிநாடுகளுக்கும் டீத்துாள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு மேல் பெய்ததால், தேயிலை செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது மழைப்பொழிவு குறைந்து வெயில் கலந்த பனிப்பொழிவு நிலவுவதால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன.
இதனையடுத்து பல்வேறு எஸ்டேட் பகுதியில், தேயிலை செடிகளுக்கு கவாத்து வெட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது: தேயிலை செடிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கவாத்து வெட்டும் பணி நடக்கிறது. தற்போது மழைப்பொழிவு குறைந்த நிலையில் ஈரப்பதம் நன்றாக இருப்பதால், பெரும்பாலான எஸ்டேட்களில் தேயிலை செடிகளுக்கு கவாத்து வெட்டும் பணி நடக்கிறது.
கவாத்து வெட்டிய பின், 90 நாட்களுக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

