/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் வடிகாலில் ரசாயனக்கழிவு; மக்கள் அதிருப்தி
/
மழைநீர் வடிகாலில் ரசாயனக்கழிவு; மக்கள் அதிருப்தி
ADDED : பிப் 13, 2025 09:49 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கண்ணப்பன்நகர் அருகே உள்ள மழைநீர் வடிகாலில் அவ்வப்போது, ரசாயன கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், கால்நடைகள் பாதிக்கின்றன.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், அதிகப்படியான தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் பெருகி வருகின்றன. சில தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல், மழைநீர் வடிகாலில் விடப்படுவதாக புகார் எழுகிறது.
மீன்கரை ரோடு, கண்ணப்பன்நகர் அருகே உள்ள மழைநீர் வடிகாலில், சிவப்பு நிறத்தில் ரசாயன நெடியுடன் கழிவு நீர் வழிந்தோடியதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மக்கள் கூறியதாவது:
பெரும்பாலான இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்கள், புதர்மண்டி காணப்படுகிறது. இதனை சாதகமாக்கிக் கொண்டு, தொழிற்சாலைகளில் இருந்தும் கழிவுநீர் வெளியேற்றப்பபடுகிறது.
மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்படும் கால்நடைகள், இந்த தண்ணீரை குடிக்கும் போது, பாதிப்படைகின்றன. மேலும், நிலத்தடி நீரும் மாசடைந்து, தண்ணீரின் சுவை மாறுகிறது. இதை தவிர்க்க, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், சுற்றுப்பகுதி தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
உரிய நிபந்தனையுடன் கழிவுநீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல, மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதைக் கண்டறிந்து தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.