/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊர் ஊராக பஸ்சில் வருகிறது சென்னிமலை கைத்தறி ஜவுளி
/
ஊர் ஊராக பஸ்சில் வருகிறது சென்னிமலை கைத்தறி ஜவுளி
ADDED : மார் 29, 2025 11:33 PM

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இயங்கி வரும், கூட்டுறவு சங்கமான சென்குமார் டெக்ஸ் சார்பில், கைத்தறி துணிகளை விற்பனை செய்யும் பிரத்யேக பஸ், ஒவ்வொரு நகராக மக்களைத் தேடிச்சென்று, துணிகளை விற்பனை செய்து வருகிறது.
சென்னிமலை கைத்தறி துணிகள், போர்வைகளுக்கு பிரசித்தி பெற்றது. கைத்தறி பிரியர்களுக்காக, சென்குமார் டெக்ஸ் கூட்டுறவு சங்கம், பிரத்யேக பஸ்சில், அனைத்து கைத்தறி தயாரிப்புகளையும், விற்பனைக்கு வைத்திருக்கிறது. இந்த பஸ், ஒவ்வொரு நகராகச் சென்று, ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் கூடுமிடங்களில் நின்று விற்பனை செய்கிறது.
கைத்தறி விற்பனையாளர் பழனிவேல் கூறியதாவது:
இந்த பஸ்சை அரசு இலவசமாக வழங்கியது. இதர செலவுகளை சங்கமே கவனித்துக் கொள்கிறது. எங்கள் தயாரிப்புகள் 100 சதவீதம் பருத்தியால் ஆனவை. போர்வைகள் 15 ஆண்டுகள் வரை உழைக்கும்.
சுத்தமான கைத்தறி என்பதால், இதர துணிகளை விட சற்று விலை கூடுதல். போர்வை, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டு, விரிப்பு, திரைச்சீலைகள் என வெவ்வேறு துணிகள் விற்பனைக்கு உள்ளன.
போர்வைகள் குளிர்காலத்துக்கு, கோடை காலத்துக்கு என தனித்தனியே உள்ளன. திருச்சி முதல் பொள்ளாச்சி வரை, ஏராளமான ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம்.
ஒவ்வொரு ஊரிலும் தேவையைப் பொறுத்து மூன்று, நான்கு நாட்கள் வரை தங்குவோம். மக்கள் கூடுமிடங்களில் வாகனத்தை நிறுத்தி விற்பனை செய்வோம்.
கைத்தறிக்கு என, சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஒரு முறை வாங்கினால், அவர்களே மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.