/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை ஓரம் கொட்டப்படும் கோழி கழிவுகள்
/
சாலை ஓரம் கொட்டப்படும் கோழி கழிவுகள்
ADDED : ஜன 02, 2026 05:10 AM

தொண்டாமுத்தூர், தென்னமநல்லூர் - பூலுவபட்டி செல்லும் சாலையோரத்தில், மூட்டை கணக்கில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசியதோடு, சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
தென்னமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தென்னமநல்லூரில் இருந்து பூலுவபட்டி, சிறுவாணி சாலையை இணைக்கும் வகையில், 1.5 கி.மீ., சாலை உள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் இடையே, நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையை ஒட்டிய சாலையோரத்தில், சிலர் தொடர்ந்து, மூட்டை முட்டைகளாக கோழிக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கோழிக்கழிவுகள், சாலை முழுவதும் பரவி, துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுத்தி வருகிறது.
கோழிக்கழிவுகள் கொட்டப்படும் பகுதி, தென்னமநல்லூர் ஊராட்சியின் எல்லைப் பகுதியாக உள்ளதால், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே, இனி, கோழி கழிவுகள் கொட்டுவதை தடுப்பதோடு, அவ்வாறு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

