/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வர் கோப்பை'; கோவைக்கு மூன்றாமிடம்
/
'முதல்வர் கோப்பை'; கோவைக்கு மூன்றாமிடம்
ADDED : அக் 24, 2024 11:30 PM

கோவை : 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டியில் கோவை மூன்றாம் இடம் பிடித்துள்ள நிலையில் நுாலிழையில் பதக்கத்தை தவறவிட்ட வீரர்களை கண்டறிந்து பயிற்சியில் ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த செப்., 10ம் தேதி மாவட்ட அளவிலான போட்டிகள் துவங்கி, 23ம் தேதி வரை நடந்தது. பள்ளி மாணவர்கள், 18 ஆயிரத்து, 679 பேர், கல்லுாரி மாணவர்கள், 16 ஆயிரத்து, 809 பேர், அரசு ஊழியர்கள், 1,449 பேர், பொதுப்பிரிவில், 2,167 பேர், மாற்றுத்திறனாளிகள், 657 பேர் என, 39 ஆயிரத்து, 738 பேர் இணையதளத்தில் போட்டிக்கு பதிவு செய்திருந்தனர்.
நேரு ஸ்டேடியம், தனியார் கல்லுாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கபடி, கூடைப்பந்து, வாலிபால் உட்பட, 36 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநில அளவிலான போட்டிகளின் நிறைவில், சென்னை, 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என, 254 பதக்கங்களுடன் முதலிடமும், செங்கல்பட்டு, 31 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் என, 93 பதக்கங்களுடன் இரண்டாம் இடமும் பிடித்தன.
மூன்றாம் இடத்தை, 23 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலம் என, 102 பதக்கங்களுடன் கோவை பிடித்துள்ளது. அதிகபட்சம், தடகளத்தில், 5 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, 21 பதக்கங்களையும், பேட்மின்டன் போட்டியில், 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்களையும் வீரர்கள் குவித்துள்ளனர்.
கூடைப்பந்து போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
இப்படி, 102 பதக்கங்களை குவித்து மூன்றாம் இடம் பிடித்துள்ள கோவை மாவட்டத்தை முதலிடத்துக்கு முன்னேற்ற வீரர்களிடம் முயிற்சியும், பயிற்சியும் மேலும் தேவைப்படுகிறது.
இந்நிலையில், போட்டியில் நுாலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்கு விளையாட்டு சங்கங்கள், பயிற்சியாளர்கள் வாயிலாக பயிற்சியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலிடத்துக்கு முயற்சி!
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்திடம் கேட்டபோது,''விளையாட்டு சங்கங்கள், பயிற்சியாளர்கள் வாயிலாக அந்தந்த விளையாட்டுகளில், 4, 5ம் இடங்களை பிடித்தவர்களை கண்டறிந்து ஊக்குவிக்கப்படுவர். அடுத்து மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் வகையில் வீரர், வீராங்கனைகள் தயார் செய்யப்படுவர்,'' என்றார்.