/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஷக்கடி பாதிப்புடன் வரும் குழந்தைகள்: கோவை அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி
/
விஷக்கடி பாதிப்புடன் வரும் குழந்தைகள்: கோவை அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி
விஷக்கடி பாதிப்புடன் வரும் குழந்தைகள்: கோவை அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி
விஷக்கடி பாதிப்புடன் வரும் குழந்தைகள்: கோவை அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி
ADDED : நவ 15, 2025 10:13 PM
கோவை: கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில், விஷம் சார்ந்த பாதிப்புடன் அட்மிட் செய்யப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் உள்ளிட்ட, பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகள் நடப்பாண்டில் துவக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீவிர பாதிப்பு நிலையில், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
எப்போதும், 100 முதல் 150 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். தவிர, ஒரு மாத குழந்தைகள் முதல் பிற வயது குழந்தைகளுக்கும், தனியாக அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.
இதுபோன்று, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் பாதிப்புகளை பொறுத்து பச்சிளம் குழந்தைகள், பிற குழந்தைகள் என்ற பிரிவில் பல்வேறு முக்கிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் சசிக்குமார் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில், மாதந்தோறும் 600-700 பிரசவங்கள் நடக்கின்றன. இதில் குறைபிரசவம், பிற குறைபாடு உள்ள குழந்தைகள் தவிர, வெளி மாவட்டங்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு வரும் குழந்தைகளும் உண்டு.
பச்சிளம் குழந்தைகள் பிரிவில், குறைபிரசவ பாதிப்பால் எடை குறைவாக 60 சதவீத குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்; இதில், 20 சதவீத குழந்தைகள் 1 கிலோவுக்கு குறைவான எடையுடன்இருக்கும்.
இதுபோன்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அதே சமயம், பாதிப்புகளின் தன்மை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியர் செந்தில்குமார் கூறுகையில், ''2025ம் ஆண்டில், ஐந்து விதமான ஆராய்ச்சிகள் துவக்கியுள்ளோம். அதில், பாம்பு, தேள் போன்ற விஷக்கடி மற்றும் எலி மருந்து, பூச்சிக்கொல்லி, அரளி போன்ற விஷம் சார்ந்த பாதிப்புகளுடன் வரும் குழந்தைகளின் உடல் உறுப்புகளில் ஏற்படும் தாக்கம், எந்த வகை விஷத்தால் எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது, சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி ஆராய்ச்சி செய்கிறோம்.
தவிர, நுண்ணுாட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் தாக்கம், சில குழந்தைகளுக்கு மட்டும் காய்ச்சல் சமயங்களில் வலிப்பு நோய் வர காரணம், எந்த மாதிரி கிருமிகளுக்கு எந்த மாதிரி ஆன்டிபயாடிக் வேலை செய்கிறது, போன்ற ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறோம். மருத்துவத்துறையில் சிகிச்சை மட்டுமின்றி, ஆராய்ச்சிகளும் செய்யவேண்டியது அவசியம், '' என்றார்.

