/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் கற்பிக்க நேரமில்லை 'ஆன்லைன்' பதிவேற்றம்தான் அதிகம் தலைமையாசிரியர்கள் அதிருப்தி
/
பள்ளிகளில் கற்பிக்க நேரமில்லை 'ஆன்லைன்' பதிவேற்றம்தான் அதிகம் தலைமையாசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில் கற்பிக்க நேரமில்லை 'ஆன்லைன்' பதிவேற்றம்தான் அதிகம் தலைமையாசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில் கற்பிக்க நேரமில்லை 'ஆன்லைன்' பதிவேற்றம்தான் அதிகம் தலைமையாசிரியர்கள் அதிருப்தி
ADDED : நவ 15, 2025 10:12 PM
கோவை: நடப்பு கல்வியாண்டில், அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை 'யூ-டைஸ் பிளஸ்' தளத்தில் நவ. 30க்குள் துல்லியமாக பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், கற்பித்தல் பணிகளில் மேலும் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆசிரியர்கள் பலர் தற்போது வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான பள்ளிகளில் தலைமையாசிரியர்களே மாணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரே வகுப்பாக அமர வைத்து அவர்கள் கவனிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இது, கற்பித்தல் பணிகளில், குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில், பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகளை பதிவேற்ற 'எமிஸ்' சார்ந்த பணிகளுக்காக உதவி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ஒரு பயிற்றுநருக்கு 3 முதல் 5 பள்ளிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர்களாலும் முழுமையாக செயல்பட முடியாத சூழல் நிலவுகிறது. தற்போது, 'யூ-டைஸ் பிளஸ்' பணிகளுக்கும் இவர்களது உதவியை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், 'எக்காரணம் கொண்டும் பயிற்றுநர்களை தங்கள் பள்ளிக்கு வரவழைக்க வேண்டாம்; அலைபேசி வாயிலாக மட்டுமே சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்' என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அனைத்து விவரங்களும் 'எமிஸ்' தளத்தில் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் 'யூ-டைஸ் பிளஸ்' தளத்திலும் அதே விவரங்களை பதிவேற்ற சொல்வதால், 'ஒரே வேலையை எத்தனை முறைதான் செய்வது?' எனத் தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர்கள்கூறுகையில், 'மாணவர்களின் தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் எங்களுக்கு அதிக அளவில் தரப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் 'கூகுள் பார்ம்' அனுப்பி விடுகிறார்கள். மாணவர் விவரங்கள், ஆசிரியர் பயிற்சி, மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றது போன்ற அனைத்து விவரங்களையும் மாதந்திர அறிக்கையாகவும் பதிவேற்றி வருகிறோம். ஆனாலும், ஒரே பணிகளை மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம். கற்பித்தல் பணிக்கு நேரம் கொடுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை' என்றனர்.

