பயணியை தாக்கிய பஸ் நடத்துனர்
சிங்காநல்லுாரை சேர்ந்தவர் முனுசாமி, 48. இவர் ஒண்டிப்புதுாரில் இருந்து வடவள்ளி செல்லும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, என்.ஜி., மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, பெண் ஒருவர் மூட்டையுடன் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது அவருக்கு முனுசாமி உதவியுள்ளார். முனுசாமிக்கும், பேருந்து நடத்துனர் கவியரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்ற, கவியரசு, முனுசாமியை தாக்கினார். பேருந்து பயணிகள் முனுசாமியை மீட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் கவியரசு, 23 மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
புகை பிடித்தவர் மீது வழக்கு
விருதுநகர், மங்களம் பகுதியை சேர்ந்த முத்து மாணிக்கம், 24. இவர் வேலை நிமித்தமாக கோவை வந்துள்ளார். அப்போது, காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள பேக்கரி முன் நின்று புகை பிடித்துள்ளார். அப்போது அவ்வழியாக ரோந்து சென்ற காட்டூர் போலீசார் முத்து மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்தனர். பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என அறிவுறுத்தி அனுப்பினர்.
மகனை அடித்த தந்தை மீது வழக்கு
பாப்பநாயக்கன் பாளையம், லட்சுமி மில்ஸ் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் குமார், 39. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், மகன் ரூபாய் நாணயங்களை எடுப்பதை பார்த்த சுரேஷ் குமார், மகனை அடித்துள்ளார். தடுக்க சென்ற மனைவி கார்த்திகாவையும் தாக்கியுள்ளார். தலையில் அடிப்பட்ட கார்த்திகா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கார்த்திகாவின் புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் சுரேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நண்பனின் தந்தையை தாக்கிய வாலிபர்கள்
பீளமேடு, அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ், 53. இவரின் மகன் அகில் 25. அகில் டிரைவராக பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன், அகிலின் பிறந்தநாள் வந்துள்ளது. இதையடுத்து அகில், சுரேஷிடம் பணம் பெற்று, மது அருந்தியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று உறங்கிவிட்டார்.
இந்நிலையில், அகிலை பார்ப்பதற்காக நண்பர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களை சுரேஷ் அனுமதிக்கவில்லை. ஆத்திரமடைந்த வாலிபர்கள் அகிலின் தந்தையை தாக்கினர். காயமடைந்த சுரேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார், சிங்காநல்லுார், கார்த்திகேயன், 25, ஆகாஷ், 24, அருண்குமார், 24 மற்றும் வால்பாறையை சேர்ந்த மாடசாமி, 29 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.