பார் ஊழியர் கைது
புலியகுளத்தை சேர்ந்தவர் சின்னப்பராஜ், 55. இவர் சவுரிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றார். அப்போது அருகில் இருந்தவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த பார் ஊழியர் ரகுபதி, 22 சின்னப்பராஜை தாக்கினார். இதில், இடுப்பு எலும்பு உடைந்த சின்னப்பராஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரகுபதியை கைது செய்தனர்.
ஆட்டோ மோதி ஒருவர் பலி
குனியமுத்துார் பகுதியை சேர்ந்தவர் குழந்தை சாமி, 53. இவர் உக்கடம் - சுங்கம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, குழந்தை சாமி சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது. கீழே விழுந்த அவர், தலையில் பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்
வடவள்ளி பகுதியில் போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, மருதமலை பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தவரிடம், சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கல்வீரம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 24 என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மணிகண்டனை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், வடவள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சபரிகிரி, 27, கோகுல், 27 மற்றும் முகமது இஸ்மாயில், 24 ஆகியோரையும் வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.