--சூதாட்டம்; 3 பேர் கைது
கோவை, பெரியகடை வீதி போலீசாருக்கு எல்.ஜி., தோட்டம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் மூன்று பேர் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து உக்கடத்தை சேர்ந்த மணிகண்டன், 53, ராஜேந்திரன், 42, சுதர்சன், 25 ஆகியோரை கைது செய்து, ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
--வாலிபரை தாக்கிய சிறுவர்கள் கைது
கோவை, உடையம்பாளையத்தை சேர்ந்தவர் எட்டப்பன், 38; கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பரை காண, பைக்கில் ரங்கநாயகி அம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது அங்கு வந்த அறிமுகமான சிறுவர்கள் இருவர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டினர். தொடர்ந்து, அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர். எட்டப்பன் புகாரின் படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, 16 மற்றும் 17 வயது சிறுவர்களை கைது செய்தனர்.
தொழிலாளியை தாக்கியவர் கைது
கோவை கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 55; தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகில் உள்ள, பொதுக் கழிப்பிடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த சில நபர்கள், மதுபோதையில் தகராறு செய்தனர். உடனே சுதாகர் அங்கிருந்து வேகமாக நடந்து செல்ல துவங்கினார். ஆனாலும் அந்த நபர்கள் அவரை மீண்டும் துரத்தி வந்து, தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியால் தாக்கினர். காயமடைந்த சுதாகரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுதாகர் புகாரின் படி, கவுண்டம்பாளையம் போலீசார் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 24 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மற்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
--பொருட்கள் கொள்ளை
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன வேடம்பட்டி ஜனதா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 42. இவர் அத்திப்பாளையம் ரோட்டில் பவர் ஹவுஸ் எதிரில் கார் சர்வீஸ் மையம் மற்றும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி, சென்னையில் பணிபுரிந்து வருகிறார். மனைவியை காண கார் சர்வீஸ் மையத்தை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். அவரது கார் சர்வீஸ் மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், கார் பெயின்டிங் உபகரணங்கள், மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். கோவை திரும்பிய பாலசுப்பிரமணி கொள்ளை குறித்து அவர் அளித்த புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையனை தேடி வருகின்றனர்.
கர்ப்பிணியை தாக்கிய கணவர்
கோவை, சிங்காநல்லுார் வரதராஜபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 26; கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஜெயந்தி, 27. மூன்று மாத கர்ப்பிணி. நந்தகுமார், அவரிடம் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். ஜெயந்தி கண்டித்தார். ஆத்திரம் அடைந்த நந்தகுமார், ஜெயந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினார். ஜெயந்தி புகாரின் படி, சிங்காநல்லுார் போலீசார் நந்தகுமார் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
-கஞ்சா விற்ற 5 பேர் கைது
கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு, ஜெயசிம்மாபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை பிடித்து, சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஜெயசிம்மாபுரத்தை சேர்ந்த சந்தோஷ், 25, மோசஸ், 26 ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
* தனலட்சுமி நகர் பகுதியில் கஞ்சா விற்ற, சரவணம்பட்டியை சேர்ந்த ஷாரூக்கான், 24, ஷேக் பரித் கான், 27 ஆகியோரை கைது செய்து, ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். செல்வபுரம் போலீசார் நித்தீஷ், 24 என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.-