ADDED : அக் 28, 2024 05:56 AM
போதை மாத்திரை விற்றவர்கள் கைது
கோவை பீளமேடு போலீசார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில், சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த சிலரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த கவின்குமார், 27, ஈரோடு பாரி நகரை சேர்ந்த சபரீஷ், 19, மற்றும் ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த பிரனேஷ், 19 ஆகிய 3 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 1 கிலோ கஞ்சா மற்றும் 36 போதை மாத்திரைகளை, பறிமுதல் செய்தனர்.
--குட்கா விற்ற மூதாட்டி கைது
கோவை, சிங்காநல்லுார் போலீசாருக்கு திருச்சி ரோடு பகுதியில் உள்ள, மளிகை கடையில் குட்கா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்குள்ள மளிகை கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். பானுமதி, 60 என்பவரது கடையில் சோதனை செய்த போது, அவர் அங்கு குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த கடையில் இருந்த 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட சிங்காநல்லுாரை சேர்ந்த பானுமதியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
-அழுகிய நிலையில் தொழிலாளி உடல்
கோவை, கணபதி கஸ்துாரி பாய் நகர், 3வது வீதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த், 45. இவர் சரவணம்பட்டியில் உள்ள டீக்கடையில், தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை பிரேம் ஆனந்த், வீட்டின் உரிமையாளர் ஜெயந்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பிரேம் ஆனந்த், அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
