வழிப்பறி செய்தவர் கைது
தெற்கு உக்கடம், அல் அமீன் காலனியை சேர்ந்தவர் அப்பாஸ்,36. அவர் உக்கடம் பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த நபர், மது குடிக்க பணம் கேட்டார். அப்பாஸ் தர மறுத்ததால், அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச்சென்றார். அப்பாஸ் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, வழிப்பறியில் ஈடுபட்டது குனியமுத்துாரை சேர்ந்த சிராஜூதீன், 36 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வியாபாரியிடம் பணம் பறிப்பு
சித்தாபுதுாரை சேர்ந்த ராஜ்குமார், 26 தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு, நஞ்சப்பா ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஆறு பேர் வழி மறித்து பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். கார் வருவதை பார்த்து அங்கிருந்து ஓடினர். ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் சென்னை, பல்லாவரத்தை சேர்ந்த ஹரிசங்கர், 33, தஞ்சாவூரை சேர்ந்த முத்துக்குமார், 27, திருப்பூரை சேர்ந்த விக்னேஸ்வரன், 29, சென்னையை சேர்ந்த நந்து, 20 மற்றும் கோகுல், 20 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
நண்பரின் தாயை தாக்கியவர் மீது வழக்கு
நீலிக்கோணாம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் திருவளர்செல்வி, 52. இவர் மகனின் நண்பரான மெர்வின், 30 என்பவரிடம் தனது மூன்று சவரன் நகையை கொடுத்து, மருத்துவ செலவிற்காக பணம் கேட்டுள்ளார். அதை அவர் அடகு கடையில் வைத்து ரூ. 1.2 லட்சம் பணத்தை கொடுத்தார். பின்னர், செல்வி பணத்தை திருப்பிக் கொடுத்து, நகையை மீட்டு தரும்படி கேட்டார்.
மெர்வின் மறுத்துள்ளார். அடகு கடைக்கு சென்று விசாரித்த போது, மெர்வின் நகையை மீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்த கேட்டபோது, மெர்வின் செல்வியையும், அவரின் மகனையும் தாக்கியுள்ளார். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
உக்கடம், சி.எம்.சி., காலனி பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சி.எம்.சி., காலனி, மைதானம் அருகில் இருந்த சிலரை விசாரித்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, சி.எம்.சி., காலனியை சேர்ந்த ஸ்ரீநிவாசன், 26 மற்றும் கனித், 20 ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.