மனைவி மீது வெந்நீர் ஊற்றியவருக்கு சிறை கோவை, ஆர்.ஜி., வீதியை சேர்ந்தவர் பிரசாந்த், 30. இவருடைய மனைவி ஜீவா, 29. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிரசாந்த் தகாத வார்த்தைகளால் மனைவி ஜீவாவை திட்டினார்.
பின்னர், சமையல் அறையில் இருந்து வெந்நீரை எடுத்து ஜீவாவின் முதுகில் ஊற்றினார். இதில் காயமடைந்த ஜீவா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ஜீவா பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடை மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு
தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையம், நரசீபுரம் மெயின்ரோட்டில், சுமார், 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதில், மொபைல்போன் சர்வீஸ் கடை, சொட்டு நீர் பாசன குழாய் விற்பனை அலுவலகம், மரக்கடை ஆகிய மூன்று கடைகளின் மேற்கூரைகளும், சிமெண்ட் சீட்டிலானவை. இந்நிலையில், நேற்று காலை, அனைவரும், வழக்கம்போல, கடைகளை திறந்துள்ளனர். அப்போது, மூன்று கடைகளின் மேற்கூரைகளும் உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரண்டு கடைகளில் இருந்த, 42 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மொபைல்போன் கடையில் இருந்த, 4 மொபைல்போன்களும் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார், சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவருக்கு சிறை
தொண்டாமுத்தூர் அருகே 40 வயது பெண், தனது வீட்டின் குளியலறையில், குளித்து கொண்டிருந்தார். அப்போது, ஒருவர், குளியலறையில் இருந்த ஓட்டை வழியாக, பெண் குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனைக்கண்ட பெண் கூச்சலிட்டார். அப்போது, அருகிலிருந்தவர்கள், அவரை பிடித்து தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் முத்திபாளையம், காந்திஜி காலனியை சேர்ந்த அன்பரசு,28, எலக்ட்ரீசியன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்பரசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.