
கோவை சிறையில் கைதி உயிரிழப்பு
கோவை செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஷேக் அகமத் ஹுசைன்,67. இவர் குற்ற வழக்கில் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. இதற்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி உடல் நிலை மோசமானது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம்
தடாகம் ரோடு, வேலாண்டிபாளையம் கட்ட பொம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது, அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த மணிகண்டன்,23, விக்ரம் மற்றும் ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், வாடகைக்கு வீடு எடுத்து அதில் இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட்டில் கருமத்தம்பட்டி போலீசார், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவை நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோவை ஓட்டி வந்த நபரை விசாரித்தனர். அவர், கோவை குனியமுத்தூரை சேர்ந்த சம்சுதீன்,45 என்பது தெரிந்தது. திருப்பூர் பகுதியில் ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதுகுறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அரிசியை பறிமுதல் செய்து, சம்சுதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
பேரூர் அடுத்த ராமசெட்டிபாளையம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் தர்மா,22, கூலித்தொழிலாளி. இவருக்கு, சோனியா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு, கடந்த, 27 நாட்களுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. நேற்றுமுன்தினம், வழக்கம்போல, குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு, 12:30 மணிக்கு, குழந்தை அசைவில்லாமல் இருந்தது.
அப்போது, குழந்தையின் வாயில் ரத்தம் வந்திருந்தது. இதனைக்கண்ட சோனியா, கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குழந்தையை சிகிச்சைக்காக சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரித்துள்ளார். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை கிண்டல் செய்தவர் கைது
கோவை, கணுவாய் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவர் கல்லுாரிக்கு சென்று, வரும் போது அதே பகுதியில் வசிக்கும் சந்துரு, 22 என்பவர் பாட்டு பாடி கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். மாணவியின் தந்தை சந்துருவிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில், சந்துரு மாணவியின் தந்தையை அடித்து கீழே தள்ளி விட்டார். பின்னர், காலால் அவரை உதைத்தார். மேலும், கத்தியை காட்டி மிரட்டினார். மாணவி தடுக்க முயன்ற போது, அவரின் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார். சம்பவம் குறித்து மாணவி, வடவள்ளி போலீசில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சத்துரு மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
போதை மாத்திரைகள் பறிமுதல் : மூவர் கைது
கோவை, சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ். ஐ. முத்துகுமார். நேற்று முன்தினம் மதுக்கரை மார்க்கெட் சாலையில் ரோந்து சென்றார். சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த கும்பலை விசாரிக்க முற்பட்டார். அப்போது நான்கு பேர் தப்பினர். பிடிபட்ட மூவரிடம் விசாரித்த போது, மேட்டூர், ஈஸ்வரன் செட்டியார் வீதியை சேர்ந்த இஸ்மாயில், 26, ஸ்ரீராம் நகர் சாதிக்.24, பிள்ளையார்புரம் தங்கராஜ், 39 என தெரிந்தது. தப்பியது விஷ்ணு (கேரளா), கார்த்தி (நஞ்சுண்டாபுரம்), மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த பப்புராம், கணேஷ் என தெரிந்தது. மேலும் அவர்களிடம் போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகள், 100 மற்றும் ஒரு ஊசி ஆகியவை இருப்பதும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர். தப்பியவர்களை தேடுகின்றனர்.