அரசு பஸ் மோதி ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன், 47 நேற்று முன்தினம் கோவை வந்தார். அவர் சிங்காநல்லுார், நஞ்சப்பா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று ராஜேந்திரன் மீது மோதியது. இதில் அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது பஸ் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இளைஞருக்கு கத்திக்குத்து
புலியகுளத்தை சேர்ந்தவர் விஜய், 23. இவர் தனது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, விஜயின் தம்பியை சிலர் தாக்குவதாக விஜயின் நண்பர் தெரிவித்தார். இதையடுத்து, விஜய் ரெட் பீல்ட் ஜங்ஷன் அருகில் தம்பியுடன் தகராறு செய்து கொண்டிருந்தவர்களை தட்டி கேட்டார்.
மதுபோதையில் இருந்த அவர்கள், திடீரென விஜயை கத்தியால் குத்தினர். விஜயின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் போதை கும்பல் அங்கிருந்து ஓடியது. விஜய் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் விக்கி, சதீஷ், பிரவீன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.