நண்பரின் காரை அடகு வைத்த நபர்
வடவள்ளி, லிங்கனுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 31; தனியார் வங்கி ஊழியர். இவரின் நண்பர் நாகா அஸ்வின், 29 குடும்பத்தோடு சுற்றுலா செல்வதாக கூறி மணிகண்டனின் காரை வாங்கினார். அதன் பின்னர், காரை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.
மணிகண்டன் கேட்கும் போது, காரணங்கள் கூறி வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டனின் மொபைல் எண்ணிற்கு அழைத்த துடியலுார் போலீசார், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளனர்.
மணிகண்டன் அங்கு சென்ற போது, தனது காரை பிரேம்குமார் என்பவருக்கு கொடுக்க அஸ்வின் ரூ. 2 லட்சம் பெற்றதும், அதே காரை அஸ்வின் மற்றும் அவரின் நணபர் ஜித்தேஸ் ரெட்டி, 21 ஆகியோர் சேர்ந்து திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டன் துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அஸ்வின் மற்றும் ஜித்தேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாநகராட்சி டிரைவர் மீது தாக்குதல்
சிங்காநல்லுார், கமலா மில் குட்டை பகுதியைச் சேர்ந்தவர், சுரேஷ், 44. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி வாகன டிரைவராக பணியாற்றி வருகிறார். இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இரவில் மட்டும் இவர் ஆட்டோ ஓட்டுவதால், பகலில் சும்மா இருக்கும் ஆட்டோவை வெங்கடலட்சுமி நகரை சேர்ந்த சதீஷ் குமாருக்கு, 30 வாடகைக்கு கொடுத்தார். சதீஷ்குமார் சரியாக வாடகை கொடுக்காததால், இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 16ம் தேதி சுரேஷ், சிங்கா நல்லுார் பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சதீஷ் குமார், சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டி பிரச்னை செய்தார். தொடர்ந்து அவரை ஜூஸ் பாட்டிலால் தாக்கினார்.
காயமடைந்த சுரேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் சதீஷ் குமாரை கைது செய்தனர்.
190 கிலோ குட்கா பறிமுதல்
கோவை செல்வபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, செல்வபுரம் பகுதியில் தெலுங்குபாளையம் ரவுண்டானா அருகில் இருந்த ஒரு கடையில், சுமார் 103 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் பீளமேடு பகுதியில் ஒரு கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார், 86.5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்த தேனியை சேர்ந்த, யாதவ் பிரசாத்,33, சீனிவாசன், 56, சித்தராஜ், 37 மற்றும் கருப்புசாமி, 45 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வாலிபர் கைது
ராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நஞ்சுண்டாபுரம், மின் மயானம் அருகில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்க, அவரின் பேக்கை சோதனை செய்தனர்.
அதில், கஞ்சா, பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அவரிடம் போலீசார் விசாரித்ததில், அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த சிபின், 25 என்பதும், தற்போது பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருப்பதாகவும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

