பூட்டை உடைத்து நகை திருட்டு
செல்வபுரம், அமுல் நகரை சேர்ந்தவர் பிரியா, 37. இவர் சுக்ரவார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 25ம் தேதி, மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த சுமார் ஆறு சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு புதிய மொபைல் திருட்டு போயிருந்தது. பிரியா செல்வபுரம் போலீசில் புகார் அளிக்க, போலீசார் விசாரிக்கின்றனர்.
டீசல் திருடியவர்களுக்கு சிறை
தெலுங்குபாளையம், கருப்பண்ணன் வீதியை சேர்ந்தவர் திலகுராசு, 55. இவர் செல்போன் டவர்கள் பராமரிக்கும் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இருகூர், பஜனை கோவில் வீதியில் உள்ள டவரை பராமரிக்க சென்றார். அப்போது, அங்கிருந்த ஜெனரெட்டரில் இருந்து இருவர் டீசல் திருடிக்கொண்டிருந்தனர். அவர்களை திலகுராசு பிடித்து, சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, இருகூரை சேர்ந்த பிரதீப் குமார், 26 மற்றும் பீளமேட்டை சேர்ந்த ஜாக்சன், 21 ஆகிய அந்த இருவரையும், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கார் மோதி ஒருவர் பலி
மசக்காளிபாளையம் ரோடு, ஏ.கே.ஜி., நகரை சேர்ந்தவர் கருணாநிதி, 41. இவர் மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மது போதையில்  சதீஷ்குமார் என்பவரின் கார் மோதியதில், கருணாநிதிக்கு தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், கருணாநிதியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கருணாநிதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
மாநகரில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்களை ஒழிக்கும் வகையில், பீளமேடு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, நவ இந்தியா, மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு பள்ளி கேட் அருகில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சுமார், 200 கிராம் கஞ்சா மற்றும் 40 போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்து, ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சிவ சூரியன், 23 மற்றும் புலியகுளத்தை சேர்ந்த வெங்கடேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

