வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவை, பீளமேடு கிரி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அஸ்வின், 27. ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த, 26ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், மூன்று கிராம் தங்க நகை மாயமாகியிருந்தது. அருகில் உள்ள அவரது உறவினர் ஜனனி என்பவர் வீட்டிலும் ரூ.40 ஆயிரம், மூன்று பவுன் நகை திருடப்பட்டிருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்படாத நிலையில், நகை பணம் மாயமாகி இருந்தது கண்டு, அஸ்வின் அதிர்ச்சி அடைந்தார். பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் நகை திருட்டு
கோவை, பிரஸ் காலனி, வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரோஜினி, 60. இவர் நேற்று முன்தினம் கோவை வேளாண் பல்கலை பஸ் ஸ்டாப்பில், இருந்து தடம் எண், 70, டவுன் பஸ்ஸில் ஏறி லாலிரோட்டில் இறங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த ஆறு பவுன் தங்கசெயின் மாயமாகிஇருந்தது. அவர் சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், பஸ்ஸில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
200 கிலோ குட்கா பறிமுதல்
கோவை, சரவணம்பட்டி, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரட்டுமேடு, கீரணத்தம் ரோட்டில், இருவர் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், பைகளில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன. பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம், ஜாலோரை சேர்ந்த அஜபாராம், 29, கோவை கரும்புக்கடையை சேர்ந்த ஆரிப்கான், 52 எனத் தெரிந்தது. விற்பனைக்காக குட்கா, பான்பராக் ஆகிய தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றது தெரிந்தது. இருவரையும் சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து, 200 கிலோ குட்கா, பான்பராக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.