போதை மாத்திரை பறிமுதல்
புலியகுளம், அம்மன் குளம் பகுதியில் வாலிபர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அம்மன் குளம், கல்லறை தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் புலியகுளத்தை சேர்ந்த நவீன், 27 என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் சோதனை நடத்தி, 110 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரை சிறையில் அடைத்தனர்.
கத்தியால் குத்தியவர் மீது வழக்கு
காந்திபார்க், ராமலிங்கம் காலனி ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ், 29. இவரின் உறவினர் தடாகம் ரோடு ராயப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் தீப் ஸ்வரூப், 35. நேற்று முன்தினம் மாலை விக்னேஷ், ஸ்வரூப்பின் குடும்ப பிரச்னை குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஸ்வரூப் தகாத வார்த்தைகளால் விக்னேஷை திட்டி தாக்கினார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஷை குத்தினார். இதில் காயமடைந்த விக்னேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போலீசை திட்டியவர் மீது வழக்கு
ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் ரஞ்சித் குமார். இவர் நேற்று முன்தினம் மாலை, ஆவாரம்பாளையம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த ராஜ்குமார் என்பவர் மற்றொரு கார் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதை பார்த்த ரஞ்சித், சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற போது, ராஜ்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி ரஞ்சித்தை பணி செய்ய விடாமல், இடையூறு செய்துள்ளார். போக்குவரத்து போலீஸ் ரஞ்சித் குமார் அளித்த புகாரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

