மாற்றுத்திறனாளியை தாக்கியவர்களுக்கு சிறை
சங்கனுார் ரோடு, சண்முகா நகரை சேர்ந்தவர் பேபி, 40; மாற்றுத்திறனாளி. இவரின் கணவர் மாணிக்கம். கடந்த 30ம் தேதி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அரவிந்த், 26, கோவில் மேட்டை சேர்ந்த மாணிக்கம், ரத்தினபுரியை சேர்ந்த கருப்பசாமி, 28 ஆகியோர் பேபியின் வீட்டிற்கு வந்தனர். அங்கு பேபியின் கணவர் குறித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் ஆத்திரத்தில் பேபியை, கீழே தள்ளி தாக்கினர். பேபியின் கதறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து ஓடினர். பேபி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளிக்க, போலீசார் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நகை வாங்குவது போல் நடித்து திருட்டு
உக்கடம், அல் அமீன் காலனியை சேர்ந்தவர் அஜ்மல், 18. இவர் பெரியகடை வீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நகை வாங்க இருவர் வந்தனர். கடையில் இருந்த ஊழியர்கள் நகைகளை எடுத்துக் காண்பித்து கொண்டு இருந்தனர். ஊழியர்கள் அசந்த நேரம் பார்த்து இருவரும், கடையில் இருந்த 15 கிராம் சொக்கத்தங்கத்தை திருடிவிட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர், கடை ஊழியர்கள் நகைகளை சரிபார்த்த போது, 15 கிராம் சொக்கத்தங்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து அஜ்மல் அளித்த புகாரில், பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர்கள் கைது அரை கிலோ பறிமுதல்
கோவை பெரியகடை வீதி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், செல்வபுரம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்ற முகமது அப்துல்லாவிடம், 38, இருந்து 110 கிராம் கஞ்சா, சாய்பாபா காலனி பகுதியில் கஞ்சா விற்ற அருணிடம், 20 இருந்து 150 கிராம் கஞ்சா, கவுண்டம்பாளையம் பகுதியில் மணி பாரத், 19 மற்றும் ஜானகிராமன், 27 ஆகியோரிடம் இருந்து 108 கிராம் கஞ்சா, செல்வபுரத்தில் கைது செய்யப்பட்ட முகமது சுகேயில், 21 மற்றும் ஆகாஷ், 20 ஆகியோரிடம் இருந்து 150 கிராம் என மொத்தம் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆறு பேரையும், போலீசார் சிறையில் அடைத்தனர்.