வழிப்பறி நபர் கைது
கணபதி, வ.உ.சி., நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 31. இவர் வேலைக்கு சென்று விட்டு கண்ணப்ப நகர் மயானம் வழியாக நடந்து சென்றார். அப்போது, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தாமரை, 39 மணிகண்டனை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்தார். தாமரை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றார். மணிகண்டன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் தாமரையை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மாமனாரை தாக்கியவர் மீது வழக்கு
வடவள்ளி, கஸ்துாரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அசோக் குமார், 52. இவரின் மருமகன் சக்தி விக்னேஷ். அசோக் குமார் தனது வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வர, முதல் தளத்தில் மகள், மருமகன் வசித்து வந்தனர். விக்னேஷ் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகி இருந்ததால், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று, விக்னேஷ் போதையில் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
சத்தம் கேட்டு முதல் தளத்திற்கு சென்ற அசோக் குமார், தனது மகளையும், பேரனையும் அழைத்துக்கொண்டு, அவரது வீட்டிற்கு சென்றார். பின்தொடர்ந்து, கீழே வந்த விக்னேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் கதவை உடைத்து திறக்க முயற்சித்தார். இதை தட்டிக்கேட்ட அசோக் குமாரை, சரமாரியாக தாக்கினார். காயமடைந்த அசோக்குமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பார் ஊழியரிடம் பணம் வழிப்பறி
சுந்தராபுரம் பூங்கா நகரை சேர்ந்தவர் சுப்ரமணி, 49. கோவில்பாளையத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்த பின், பைக்கில் வந்து கொண்டிருந்தார். உக்கடம் பெரியகுளம் பகுதியில், திருநங்கை ஒருவர் வண்டியை மறித்து பணம் கேட்டார். அதற்கு சுப்ரமணி கொடுக்க மறுத்தார். திருநங்கை, சுப்ரமணியின் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினார். சுப்ரமணி புகாரின் பேரில், பெரியகடைவீதி போலீசார் வழக்கு பதிந்து திருநங்கையை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
பீளமேடு பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர் சரோஜா, 60. நேற்று முன்தினம், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரை பார்த்து விட்டு, ஆட்டோவில் வீடு திரும்பினார். தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே, நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்மநபர் ஒருவர் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த, ஐந்தரை பவுன் செயினை பறித்து தப்பினார். புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.