சிறுமியை திட்டியவர் மீது வழக்கு
உக்கடம், புல்லுக்காடு பகுதியில் வசித்து வருகிறார் 13 வயது சிறுமி. அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி, பள்ளிக்கு செல்ல புறப்பட்டு சென்ற போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் தவுலத் நிஷா, 48 என்பவர் சிறுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். சிறுமியின் புகாரின்படி, போலீசார் நிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பணம் பறித்தவருக்கு சிறை
வி.என்.தோட்டம், படேல் ரோட்டை சேர்ந்தவர் சவுரிமுத்து, 33. இவர் செங்குப்தா வீதியில் இளநீர் கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி கடைக்கு வந்த படேல் ரோட்டை சேர்ந்த சசிக்குமார், 45 சவுரிமுத்துவிடம் மது குடிக்க, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவர் தர மறுத்ததால் கத்தியை காட்டி பணம் மிரட்டி ரூ. 430 பறித்து சென்றார். ஏற்கனவே சசிகுமார் 6 மாதங்களுக்கு, மாநகர பகுதியில் இருக்க கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதை மீறி, சசி குமார் இளநீர் கடையில் பணம் பறித்ததை அறிந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காப்பர் ஒயர் திருடியவர் கைது
மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தனமணி, 53. இவர் வடவள்ளி - கஸ்துாரிநாயக்கன்பாளையம் ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக, 40 மீட்டர் காப்பர் ஒயர் வைத்திருந்தார். நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், காப்பர் ஒயரை திருடி செல்ல முயன்றார். இதைப்பார்த்த தனமணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருடனை பிடித்து, வடவள்ளி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் காப்பர் ஒயரை திருடியது தேனி மாவட்டத்தை சேர்ந்த காமதுரை, 35 என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
லாட்ஜில் மரணம்
கேரளம், மலப்புரத்தை சேர்ந்தவர் முகமது பனீஷ் , 32. மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. பனீஷ் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி காலை மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு, வீட்டில் இருந்து பனீஷ் கிளம்பினார். அன்று மாலை மனைவிக்கு, வீடியோ காலில் அழைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். அவர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அவர் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்திருப்பது தெரியவந்தது. உறவினர்கள் விடுதிக்கு வந்து, அறையை திறந்து பார்த்தனர். அப்போது அவர் மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் காணப்பட்டார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.