கஞ்சா விற்ற இருவர் கைது
ரேஸ்கோர்ஸ் போலீசார் ஆவாரம்பாளையம், கே.கே.நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின், முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த நிபாஷ், 23 மற்றும் நோபா டோலி, 21 ஆகியோர் என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார்,அவர்களிடம் இருந்து 1.260 கிலோ கஞ்சா, 25 ஜிப் லாப் கவர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பித்தளை,- காப்பர் திருட்டு
ராமநாதபுரம், பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 29. இவர் ராமநாதபுரம் ஆறுமுகம் நகர் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி விக்னேஸ்வரன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள, 140 கிலோ பித்தளை மற்றும் காப்பர் ஆகியவை திருட்டு போயிருந்தது. ராமநாதபுரம் போலீசில் விக்னேஸ்வரன் புகார் அளிக்க, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்து அமைப்பினர் மீது வழக்கு
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த, இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த போத்தனுார், கணேசபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன், 60, பி.என்.புதுாரை சேர்ந்த கனகராஜ், 65 ஆகியோர் தலைமையில் 17 பேர் சுந்தராபுரம், சங்கம் வீதியில் கூடி, மலர் அஞ்சலி செலுத்தினர். அனுமதி இன்றி பொது இடத்தில் கூடி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக, 19 பேர் மீது சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.