பூட்டை உடைத்து திருட்டு
கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மூகாம்பிகை, 38. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பார்மசியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் மூகாம்பிகை பணிக்கு சென்றார். மாலை திரும்பி வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த டிவி, மிக்ஸி, 14 கிராம் தங்கம், ரூ. 5 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. மூகாம்பிகை கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏ.டி.எம்.,பயன்படுத்தி திருட்டு
கேரளத்தை சேர்ந்தவர் சாஜி, 42. சினிமா கம்பெனி ஒன்றில் சமையல் கலைஞர். கோவை, நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சாஜிக்கு பணம் எடுக்க உதவி செய்வது போல், சாஜியின் ஏ.டி.எம்., கார்டை எடுத்துக்கொண்டு, வேறு ஒரு கார்டை சாஜியிடம் கொடுத்துச் சென்றார்.
இதன் பின்னர், சாஜி அங்கிருந்து சென்றுவிட்டார். அன்று இரவு, சாஜியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.61 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக, சாஜிக்கு குறுஞ்செய்தி வந்தது. அவர் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கடன் தொல்லையால் தற்கொலை
வேலாண்டிபாளையம், ராஜாஜி நகரை சேர்ந்தவர் லதா, 36. இவர் வெளியில் பலரிடம் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல், கடந்த சில மாதங்களாக லதா, மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த 15ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போதை மாத்திரை பறிமுதல்
துடியலுார் போலீசார், வெள்ளக்கிணறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வெள்ளக்கிணறு, சமத்துவபுரம் பகுதியில், இருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், ஊசி, போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ரத்தினபுரியை சேர்ந்த சுரேந்திர குமார், 25, மேகராஜ், 28 ஆகிய அந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

