/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிட்டி கிரைம்: பைக் மோதி முதியவர் பலி
/
சிட்டி கிரைம்: பைக் மோதி முதியவர் பலி
ADDED : அக் 02, 2025 11:03 PM
கோவை, சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகரை சேர்ந்தவர் நாகரத்தினம்,68; நேற்று முன்தினம் உக்கடம் சுங்கம் பைபாஸில் பைக் ஷோரூம் அருகே ஓரமாக நடந்து சென்றார். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், நாகரத்தினம் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றார். ரோட்டில் விழுந்ததில் தலை மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்தியவரை தேடுகின்றனர்.
லாட்டரி விற்றவர் கைது
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., வினோத் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுண்டக்காமுத்துார் பள்ளி அருகே சட்ட விரோதமாக கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது, சுண்டக்காமுத்துாரை சேர்ந்த மோகன்ராஜ், 42 லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது. பேரூர் போலீசார் அவரை கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
வாலிபரை தாக்கிய மூவர் கைது
போத்தனுாரில் உள்ள திருமறை நகரை சேர்ந்தவர் ஆஷிக், 20; கடந்த, 25ல் திருமறை நகர் பள்ளிவாசல் அருகே சென்றார். அங்கு வந்த, சங்கமம் நகரை சேர்ந்த அபுபக்கர் ரஷீத், 22, குர்ரத்துள் லே-அவுட்டை சேர்ந்த அப்பாஸ், 22 மற்றும் கரும்புக்கடை, பள்ளி வீதியை சேர்ந்த சமீர் அலி, 22 ஆகியோர், ஆஷிக்கை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். அம்மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
பேராசிரியர் தற்கொலை
ஈச்சனாரி அடுத்துள்ள தனியார் கல்லுாரியில், குனியமுத்துார் அடுத்த பி.கே.புதுார், இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ்குமார், 43 பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சிகரெட் புகைக்கும் பழக்கமுடையவர். மனைவி பிரியங்காதேவி கண்டித்ததால், நிறுத்தினார். மீண்டும் சிகரெட் புகைக்க ஆரம்பித்தார். கடந்த, 1ம் தேதி மதியம் பிரியங்காதேவி அருகே உள்ள கடைக்கு சென்றிருந்த சமயத்தில், மின்விசிறி கொக்கியில், துப்பட்டாவால் கணவர் துாக்கில் தொங்கியுள்ளார். அருகே வசிப்போர் உதவியுடன் கீழே இறக்கி, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறினர். குனியமுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.