ADDED : ஜன 20, 2025 11:30 PM
ஏ.டி.எம்., ல் பணம் எடுத்து வருவதற்குள் பைக் திருட்டு
பொள்ளாச்சி நெகமம், ரங்கம்புதூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், 27. நேற்று முன்தினம் இவர் கோவை வந்தார். கோவை, சிட்ராவில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். பைக்கை ஏ.டி.எம்., மையம் முன் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கை, மர்ம நபர் திருடி சென்றார். வெளியே வந்து பார்த்த போது, பைக் மாயமானதை கண்டு, பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் பைக்கை திருடிச் செல்வது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலைப் பொருட்கள் கடத்தல்; மூவருக்கு சிறை
கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு, காந்திபார்க் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அதில், 11 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அவற்றை பதுக்கிய ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மோகன்ராம், 49, தெலுங்குபாளையத்தை சேர்ந்த சரவணராஜ், 52, பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், 21 ஆகிய மூவரை, சிறையில் அடைத்தனர்.

