/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிட்டி கிரைம் செய்திகள் கோவை_சிட்டி
/
சிட்டி கிரைம் செய்திகள் கோவை_சிட்டி
ADDED : மே 23, 2025 12:21 AM
சாலை விபத்தில் இருவர் பலி
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அஷ்வின் குமார், 69; இவர் தனது ஸ்கூட்டரில் அவிநாசி சாலை, பாரதி காலனி சந்திப்பு பகுதியில் சென்ற கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதேபோல், மதுரையை சேர்ந்த லோகேஷ், 23 சத்தி ரோடு, கணபதி பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் தலை பிளந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு சம்பவங்கள் குறித்தும் கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா வாலிபர் கைது
கவுண்டம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஆகாஷ், 23 என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் 110 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பணம், சிகரெட் திருட்டு
கோவை, வேலாண்டிபாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஜேக்கப், 34; தடாகம் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 20ம் தேதி இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை, 5 மணிக்கு ஜேக்கப் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் பணம், ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான 10 சிகரெட் பண்டல்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து ஜேக்கப் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.