ADDED : பிப் 22, 2024 11:56 PM
பஸ்சில் நகை திருட்டு
கோவை, கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட்டில் வசிக்கும், ஸ்ரீ ஜா,39, என்பவர், காந்திபுரத்திற்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். சாய்பாபா காலனியில் வந்தபோது, அவர் கழுத்தில் கிடந்த, மூன்றரை சவரன் தங்க செயினை காணவில்லை. கூட்ட நெரிசலில், மர்ம ஆசாமிகள் பறித்து சென்றது தெரிய வந்தது. காந்திபுரத்திற்கு பஸ் வந்த பிறகு, காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருள் பறிமுதல்
சரவணம்பட்டி, விநாயகர்புரத்திலுள்ள மளிகைக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கிருந்து, 2,942 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியனை கைது செய்த போலீசார், பின் ஜாமினில் விடுவித்தனர்.
மொபைல் டவரில் திருட்டு
கோவை, இருகூர் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன்புதுாரில், தனி நபருக்கு சொந்தமான காலியிடத்தில், ஒப்பந்த அடிப்படையில் ஏர்செல் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. டவர் செயல்படாமல் போனதால், ஆய்வு செய்தபோது, அதிலிருந்த எலட்ரிக் பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. அதன் நிர்வாக அலுவலர் அர்ஜுனன் கொடுத்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
கோவை, சொக்கம்புதுாரை சேர்ந்த செந்தில்ராஜா,41, அசோக் நகரை சேர்ந்த சஞ்சீவ்குமார் , 27, போத்தனுாரை சேர்ந்த பிரசாந்த்,33, ஆகியோர், செல்வபுரம் ரவுண்டானா பகுதியில் நின்று கொண்டிருந்தனர். செல்வபுரம் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்தனர். சோதனையில், விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 200 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.